Wednesday, March 11, 2020

தெய்வங்களாலும் முன்னோர்களாலும் கை விடப் பட்டவன்.


இதுவரை
வாழ்நாளில் ஒருமுறை கூட வந்திராத காவல் நிலையத்தில் என்னுடைய ஐம்பத்தெட்டு வயது பூர்த்தியான சில நாட்களில் நின்று கொண்டிருக்கிறேன்.ஒருவர் ஜீப்பைத் துடைத்துக் கொண்டிருக்க,எதிரே இருந்த மகளிர் காவல் நிலையத்தின் வாசலில் கூட்டமாக சிலர் நின்று கொண்டிருந்தார்கள்.

இயல்பான
பரபரப்பில் இருந்த காவல் நிலையத்தில் சீருடையில் இருந்த ஒரு இளைஞன் அருகில் வந்ததும், இன்ஸ்பெக்டரைப்  பார்க்கணும். வரச் சொல்லி இருக்காங்க என்றேன்.

ஐயா
ரவுண்ட்ஸ் போயிருக்காங்க.வர்ற நேரம்தான் அந்த பெஞ்சில உட்காருங்க என்றபடி அலைபேசியில் வந்த அழைப்புக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

தனியா
போகாதீங்க.கூட யாரையாவது கூட்டிட்டு போங்க. எனக்கு பயமா இருக்கு. இல்ல, நானும் கூட வர்றேன் என்ற ஜானகியிடம்

என்ன தூக்கிலயா போடப் போறாங்க. சும்மா விசாரிக்கறதுக்குத்தானே கூப்பிட்டிருக்காங்க.நான் போயிட்டு வரேன்.நீ பதறாம இரு என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.

வாகனங்கள்
எதிரெதிர் திசைகளில் விரைந்து கொண்டிருக்கும் சாலையில்,அலறியபடி ஒரு ஆம்புலன்ஸ் பறந்தது.

மின்விசிறி
சுழலும் ஓசையில்,தெரு விளக்கின் மென்னொளி விரவியிருந்த அறைக்குள், என் மார்பில் தலைவைத்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஜானகியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.இன்னும் சில நாட்களில் ரத்தமும் சதையுமாக ஒரு உயிர் என் கைகளில் இருக்கப் போவதை நினைத்து சந்தோஷத்தில் மனம் விம்மும் போதுதான் என் வாழ்வில் என்றென்றும் நினைவிலிருக்கும் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

என் உடலோடு ஒட்டி இருந்த ஜானகியின் மேடிட்ட வயிற்றுப் பகுதியிலிருந்து சிறு அசைவுகளை உணர்ந்தேன்.கடவுளே, அம்மாவின் உள்ளிருந்து குழந்தை அப்பாவைத் தொடுகிறாள்.சில வினாடிகள் அசைவுகள் சில வினாடிகள் அமைதி மறுபடியும் அசைவுகள், பரவசமாக ஜானகி நெற்றியில் முத்தமிட்டேன்

அலைபேசி
அதிர்ந்தது.பாலு.

ஹலோ

என்னடா இப்பத்தான் ஜானகி போன் பண்ணுச்சு. நாங்கல்லாம் இல்லையா நீ எதுக்கு தனியா போன? இன்ஸ்பெக்டர் வந்துட்டாரா?

இன்னும் இல்ல

சரி, பத்து நிமிஷத்துல வந்துடறேன்.

வயதான ஒரு பெண்மணியை எதிர்பார்த்து,எக்ஸ்க்யூஸ் மீ என்று கதவை தள்ளி உள்ளே போன எனக்கு,டாக்டரின் நாற்காலியில்,ஒரு சிறு பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

வணக்கம் டாக்டர். நான் ஜானகியோட ஹஸ்பன்ட்.

சொல்லுங்க

தப்பா நினைக்காதீங்க ஜானகிக்கு சிசேரியன் பண்ணிடலாம்

ஏன்?

அட்மிஷன் போட்டு ரெண்டு நாள் ஆச்சு.

நாங்க மானிட்டர் பண்ணிட்டு தான் இருக்கோம். பேபியும், மதரும் நல்லா இருக்காங்க நார்மல் டெலிவரிக்கு நிறைய சான்ஸ் இருக்கு.

இல்ல டாக்டர்.அவ ரொம்ப கஷ்டப் படுறா.

நீங்க நிம்மதியா ஆபீஸ் போங்க.நாங்க பாத்துக்கறோம் என்ற டாக்டரின் முகத்தில் மறைக்க முடியாத சிரிப்பு.

இவ்வளவு
லூசாவா இருப்பீங்க.டாக்டர் உங்கள பத்தி என்ன நினைச்சிருக்கும் என்று சிரித்த ஜானகியின் முகம் திடீரென சுருங்கியது.

என்
கைகளை இறுகப் பற்றிக் கொண்டு,அம்மாவை கூப்பிடுங்க என்றாள். அவள் கைகளுக்கு இடையே என் விரல்கள் நொறுங்கிக் கொண்டிருந்தன.

அத்தை
அத்தை என்றேன்

உள்ளே வந்தவர் நர்சை கூப்பிடறேன் என்றபடி வேகமாகப் போனார்.

ஒரு வயதான பெண்மணி உள்ளே வந்து, நீங்க வெளியில போங்க சார் என்றதும் வெளியே வந்தேன்.

ஜானகியின் முகத்தில் அத்தனை வலிச் சுழிப்பு.இதுதான் பிரசவ வலியா?ஆரம்பமே இப்படி என்றால் போகப் போக எப்படி இருக்கும்?என் உடல் அதிர ஆரம்பித்தது.

அலைபேசி
அதிர்ந்தது.சேலத்தில் உடன் பணிபுரிந்த சண்முகம்.

சார் வணக்கம்.சௌக்கியமா இருக்கீங்களா?

நல்லா
இருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க?

சாரி
சார். ஒரு முக்கியமான பங்க்ஷன்.அதனாலதான் சாரோட ரிட்டயர்மென்ட் பார்ட்டில கலந்துக்க முடியல விஷ் யூ எ ஹேப்பி ரிடையர்ட்  லைஃப் சார்.

நன்றி சண்முகம் சந்தோஷம்.

சென்னையில் இருந்து மதுரை நோக்கி அதிர்ந்து கொண்டிருந்தது வைகை எக்ஸ்பிரஸ்.

அவசரமாக பாத்ரூம் போகவேண்டும் ப்ளாடர் நிரம்பி கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.மடியிலிருந்து ஜனனி இறங்க மறுக்கிறாள்.

கொஞ்ச நேரம் அம்மாட்ட வா.

மாட்டேன்
.அப்பா கிட்ட தான் இருக்குவேன்

சொன்னாக கேளு பாப்பா

முடியாது போ எங்க அப்பா

என் சட்டையைப் பிடித்துக் கொண்டு ஜனனி கதறக் கதற பிரித்தெடுத்து நீங்க போயிட்டு வாங்க என்று ஜானகி சொன்ன போது பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் சிரித்தார்கள்.

ஆபீசில்
பெர்மிசன் போட்டு வந்திருக்கேன்.டைம் ஆயிட்டு இருக்கு. சார் எப்ப வருவாரு?

வர நேரம் தான்.ரவுண்ட்ஸ் போயிருக்கப்ப டைம் எல்லாம் சொல்ல முடியாது.கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

கேட்டவர்
சற்றுத் தள்ளி நின்று அலைபேசியை எடுத்து யாரையோ அழைத்தார்.

என்ன ரொம்ப அழுதாளா?
இல்ல.அங்க இருந்த நிறைய குழந்தைகள் அழுதுட்டு இருந்தாங்க.இவ திரும்பி திரும்பி என்னை பார்த்து கிட்டே போயி ஒரு பொண்ணு பக்கத்துல உட்கார்ந்துகிட்டா.அழுகவே இல்ல.

அய்யய்யே என்ன நீங்க அழுகறீங்க.அவ
ஸ்கூலுக்குத்தான போயிருக்கா.என்னமோ மாப்பிள்ளை வீட்டுக்கு போன மாதிரி அழுகறீங்க.

ஆனால் இப்டிச் சொல்லிச் சிரித்தவளும்,ஜனனி இரண்டு நாட்களாக குறையாத வைரல்
ஃபீவரில் கண்களைத் திறக்க முடியாமல் உலர்ந்த சிறு உதடுகளைப் பிரித்து, அப்பா ஒரு கதை சொல்லுங்க அப்பா என்ற போது என்னுடன் சேர்ந்து அழத்தான் செய்தாள்.

நான்
அவங்க கிட்ட பணம் வாங்கல சார் அவன் பொய் சொல்றான்னு சொல்லுங்க.ஓவரா மிரட்டினா,நாங்க கோர்ட்ல பார்த்துக்கிறோம்னு சொல்லிறலாம். நீங்க ஸ்டெடியா, போல்டா பேசனும்.அதுதான் முக்கியம்.

டேய்
கவனமாக கேட்டுக்கிட்டயா.சொதப்பிறாத.நாம பயந்தாதான் போலீஸ் ஏறி மிதிக்கும்.லாயர் சார் வாங்க இன்ஸ்பெக்டர் வர்றதுக்குள்ள ஒரு டீ சாப்பிட்டு வந்துறலாம்.

என்ன
எழவுடி இது.லெக்கின்ஸாம்.மண்ணாங்கட்டி. காலெல்லாம் அப்படியே தெரியுது.இந்தக் கருமத்தை எல்லாம் நீ போடக்கூடாது. காலேஜ்க்கு சுடிதார் போட்டுட்டு போ போதும்.

அப்பா ப்ளீஸ்ப்பா.காலேஜ்ல
எல்லாம் கேலி பண்றாங்க.இப்ப எல்லாரும் லெக்கின்ஸ்தான் போடறாங்க.டைட்டால்லாம் போட மாட்டேன்.நல்லா லுசாப் போடறேன்.அசிங்கமா இருக்குன்னு நீங்க சொன்னா போட மாட்டேன்.ப்ளீஸ் ப்ளீஸ்ப்பா.

சரி அவ போட்டுத்தான் காண்பிக்கட்டுமே.

இப்படியே அவ இஷ்டத்துக்கு ஆட விடுங்க.உங்களாலதான் அவ இந்த ஆட்டம் போடறா.

அலைபேசியில் ஜானகியை
அழைத்தேன்.

இன்ஸ்பெக்டர
பாத்துட்டீங்களா?

இல்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.

பயமா இருக்குங்க.

எதுக்கு பயப்படற?
கொஞ்ச நேரத்துல பாலு வர்றேன்னு சொல்லியிருக்கான்.

கிட்டத்தட்ட
முழு வட்டமாக இருந்தது பௌர்ணமிக்கு முந்தைய நாளின் நிலவு.தெருவில் ஓசைகள் அடங்கத் தொடங்கியிருந்த நேரம். மொட்டை மாடியில் என் கைகளைப் பிடித்துக் கொண்ட ஜானகி, நேத்து ஜனனியை யாரோ ஒரு பையன் கூட அந்த புதுசா வந்துருக்கற மால்ல பார்த்ததா வேணி அக்கா சொன்னாங்க. காலேஜ்க்கு கட்டடிச்சிட்டு போயிருக்கா எனக்கு பயமா இருக்குங்க.இத்தனை வருஷமா மரியாதையா வாழ்ந்துகிட்டிருக்கோம்.இவ தெருவுல இழுத்து விட்டுருவா போலருக்கு.

இரு அவசரப்படாதே ஒண்ணுமில்லாத விஷயத்த நாமே பெருசு பண்ணிடக் கூடாது.ரொம்ப மோசமான வயசு கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் ஹேன்டில் பண்ணனும்.

காயத்ரி
கல்லூரிக்குப் போனதும்,கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த ஜனனியிடம் சொன்னேன்.

உட்காருமா
கொஞ்சம் பேசணும்.

ஜானகி கதவை சாத்தி விட்டு வந்தாள்.

இங்க பாரும்மா.இத்தனை காலமாக உன்கிட்ட ஒரு நல்ல ப்ரெண்டாத்தான் பழகி இருக்கேன். நம்ம குடும்பத்துக்கு ஒரு கவுரவம், மரியாதை இருக்கு. நான் கேக்கறதுக்கு அமைதியாக உண்மையைச் சொல்லு. நேத்து மத்தியானம் காலேஜுக்குப்  போகாம எங்க போன?

அப்பா இல்லப்பா.நான் ஒரு ப்ரண்டு பர்த் டேன்னு..

ஏய் என்னடி மழுப்பிட்டிருக்க.உங்க
ரெண்டு பேரையும் மால்ல பார்த்த வேணிக்கா வந்து சொல்லிட்டாங்க.அப்படியே நாக்கப் புடிங்கிட்டு சாகலாம் போல இருந்தது.

ஏய்,சும்மாரு.நீ சொல்லும்மா

ஆமா,
நான் பிரவீனை லவ் பண்றேன்

நீ இப்பதான் காலேஜ் படிக்கிற. இந்த வயசுல இந்த மாதிரி இன்பாச்சுவேஷன் எல்லாம் சகஜம்மா.நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது.

அவன்
எம் மேல உயிரையே வச்சிருக்கான்ப்பா.

இதெல்லாம்
எல்லாப் பயலுகளும் சொல்ற டயலாக்தாம்மா.உன்ன இத்தனை வருஷம் கண்ணுக்குள்ள வச்சுப் பாத்து  வளர்த்த எங்களுக்கு, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தரத் தெரியாதா? உனக்குப் பின்னால உன் தங்கச்சி இருக்கா.நீ இப்படி பண்ணினா நாளைக்கு அவளை எப்படி கல்யாணம் பண்ணிக் கொடுக்கறது?

இறுகின முகத்துடன் தலை குனிந்து
உட்கார்ந்திருந்தாள் ஜனனி.

உங்க தாத்தா பாட்டி அதுதான்மா எங்க அப்பா அம்மா, அந்தக் காலத்திலேயே லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.பெரிய அத்தை கல்யாணப் பேச்சை எடுக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? மாப்பிள்ளை அப்பா ஜாதில பாக்குறதா? இல்ல அம்மா ஜாதில பாக்குறதா? இல்ல இதே மாதிரி கலப்புல பாக்குறதான்னு புரோக்கர் கேட்டப்ப எவ்வளவு கஷ்டமா
இருந்தது தெரியுமா?கல்யாணங்கறது வெறும் இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயமில்லைமா.அது ஒரு பெரிய சங்கிலித்தொடர்.

இல்லப்பா
.நீங்க என்ன சொன்னாலும் என்னால ப்ரவீன் இல்லாம வாழ முடியாது.

ச்சீ.நாயே,ஒரு மனுஷன் இவ்ளோ பொறுமையா சொல்றாரு.மறுபடி மறுபடி நீ பேசுனதையே திரும்பத் திரும்ப பேசிக்கட்டிருக்க.ஏன்டி,ஒனக்கு தாய் தகப்பன் முக்கியமில்ல கூடப் பொறந்தவ வாழ்க்க நாசமா போனாலும் கவலையில்லை. நீ ஆசைப்பட்டவங் கூட சந்தோசமா வாழனும் அவ்வளவு தானே.வீட்ட விட்டு வெளிய போடி.நீ பொறக்கும் போதே செத்துத்தான் பொறந்தேன்னு நெனச்சுக்கறேன்.

சட்டென்று
எழுந்து கதவை திறந்து கொண்டு வெளியே போனவளைத் தடுக்கக் கூடத் தோன்றாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.நான் வணங்கிய அத்தனை தெய்வங்களும் என் முன்னோர்களும் என்னைக் கை விட்டார்கள்.

என்னடா
இதெல்லாம்? போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வரணுமா?

நான் ஆசைப்பட்டா வந்தேன். என்னால அவங்க உயிருக்கு ஆபத்து இருக்குனு என் பொண்ணு என் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கறதாவும்,அது சம்பந்தமா விசாரிக்க ஸ்டேஷனுக்கு வரணும்னு, வீட்டுக்கே போலீஸ்காரர் வந்து சொன்னார்.

வந்து நின்ற
வாகனத்தில் இருந்து இறங்கி போனவரைப் கண்டதும் எழுந்து வணக்கம் சொன்னோம். தலையசைத்து ஏற்றுக் கொண்டு உள்ளே போனார்.

உட்கார்ந்த போதுதான்,பைக்கில்
வந்து இறங்கிய ஜனனியைப் பார்த்தேன்.கருப்பு நிற பைக்கை நிறுத்தி சாவியை எடுத்து இறங்கும்,ஜீன்ஸ் போட்ட,தாடி வைத்த, கண்ணாடி அணிந்தவனை இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.

அத்தனை
சந்தோசமாக அவனிடம் ஏதோ சொல்லி சிரித்தபடி திரும்பியவள் என்னை பார்த்ததும் அப்படியே இறுகிப் போனாள்.

நான்
தூக்கி வளர்த்த,என் சட்டை நுனியை இறுகப் பிடித்துக் கொண்டு போ.அப்பாகிட்டதான் இருக்குவேன் என்று அழுத,நாங்கள் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துப் பாதுகாத்த, எங்கள் வாழ்வும்,கௌரவமும் அவள்தான் என்று நாங்கள் எண்ணியிருந்த,வயோதிகத்தில்,நோய்மையில் நாங்கள் தள்ளாடும் போது எங்களை தாங்கிப் பிடிப்பாள் என்று நாங்கள் முழுமையாய் நம்பியிருந்த எங்கள் செல்ல மகள் உலகத்தின் அத்தனை வெறுப்பையும் உமிழும் கண்களால் ஒரு வினாடி, ஒரே ஒரு வினாடி என்னைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்ட போது,

சார்
.ஒங்கள அய்யா கூப்பிடுறார் என்ற குரலைக் கேட்டேன்

No comments:

Post a Comment

மகா லட்சுமி

சென்னை எக்மோரில் இருந்து விழுப்புரம் திருச்சி வழியாக மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் மூன்றாம் நடைமேடையில் இருந்து ...